Friday 2 March 2012

பள்ளிக்கூடம் ....

 
 
 



இவளும் நம் தாயல்லவா
தாயவள் கருவறையில்
நமக்கு உருவம் கொடுபாள்

பள்ளிக்கூட வகுப்பறையோ
நம் வாழ்வுக்கு வழி திறப்பாள்

குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க பொருளாகும்

பள்ளிகூடமோ நம்மை
மாண்புமிகு மனிதர்களாக்கும்

மனிதனை மனிதனாக்குவதும்
பள்ளிக்கூடமே

பட்டங்களும் பதவிகளும் தந்து
சரித்திரம் படைக்க வைக்குமே

அறிவு எனும் கண்ணைதிறந்து
கல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

 

Wednesday 29 February 2012

வயிற்றைக் கேள்!

 
எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..

நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.






தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது
 
தொடர்புடைய இடுகைகள்

Tuesday 28 February 2012

அதே சிரிப்பூ..?

 
 

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச்சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப்பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.

கீழே விழுந்த ஒருவன்தன் வலியைவிட
தன்னை யாரும்
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ?
என்பதிலேயேவிழிப்புடனிருப்பான். அதுபோல,

நம்மை யாரும்பார்க்காவிட்டாலும்,
எல்லோரும் நம்மைமட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.

அந்த நேரத்தில்வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும்.
தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும்பார்க்கத் தோன்றாது.


இங்கே ஒருபெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.
 
 
தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்தகார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறிச்சென்றான். கார்காலம் வந்தும் அவன்வரவில்லை. இவ்வேளையில் இயல்பாக மலர்ந்த முல்லையைக் காண்கிறாள் தலைவி. இவளுக்கு முல்லை தன் தலைவனின் உயர்வு அவ்வளவுதானா? என்று எள்ளி நகையாடுவதாகவே தோன்றுகிறது.
 
பாடல் இதோ.

-ஒக்கூர் மாசாத்தியார்


குறுந்தொகை -126. முல்லை - தலைவிகூற்று
பருவம் கண்டு அழிந்ததலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.

இதே போன்ற இன்னொரு பாடல்..
 
மேற்கண்ட பாடலில் தலைவியைக் கண்டு சிரித்த முல்லைஇங்கு தலைவனைக் கண்டு சிரிக்கிறது..
 
ஏன் என்று பாருங்கள்..

இயல்பாகவே மாலையில் மலர்ந்த முல்லை மலரைக் கண்ட தலைவனின் மனது முல்லை மலரோடு பேச ஆரம்பித்துவிடுகிறது..
 
தலைவன் - ஏ முல்லை மலரே தலைவியை நீங்கித் தனித்திருக்கும் என்னைக் கண்டு இரக்கம் கொள்ளவேண்டிய நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாயே இது உனக்கே தகுமா?
 
முல்லை - இப்போது நீ தலைவியுடன் சேர்ந்தல்லவா இருக்கவேண்டும்.
அவளைத் தனிமையில் தவிக்கவிட்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்..
 
என்று கேட்டுவிட்டு கலகலவென முல்லை சிரிக்கும் ஒலி தலைவனின் காதில் கேட்கிறது.


 

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.
என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.

குறுந்தொகை 162
 
கருவூர்ப் பவுத்திரன்.
(முல்லையே, நீ வாழ் வாயாக!
மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீரையுடைய அகன்ற முல்லைநிலத்தின்கண்,
தாம்சென்ற பணி முடிந்து பலரும் தம் வீட்டிற்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,
நீ உனது சிறிய வெள்ளியஅரும்புகளைக் காட்டிச் சிரித்தாய்!
தலைவியரைப் பிரிந்துஎன்போல் தனித்திருப்போரை
எள்ளி நகைப்பதுபோலவே உன் செயல் இருக்கிறது.
இது உனக்குத் தகுமோ?)
 
இலக்கியநயம்

முல்லை மலர்வது இயல்பான ஒன்றுதான் என்றாலும் இங்கு தலைவிக்கும், தலைவனுக்கும் அது தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறது என்றே தோன்றுகிறது.
இருவரின் குற்றவுணர்வுமே இதற்கு அடிப்படையாக அமைகின்றன.
தம் அகவாழ்வை இயற்கையோடு அழகாகப் இயைபுபடுத்திப் பார்க்கும் சங்கத்தமிழரின் வாழ்வு இன்றைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்க வேண்டிய இனிய நினைவுகளாகும்.

தொடர்புடைய இடுகைகள்

வலி .....







 


நாட்களும் நொடிகளும்
நகர மறுப்பதேன் ?

உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும்
பசிப்பதில்லையே ஏன் ?

உறவெல்லாம் உடன் இருந்தும்
தனிமை என்னை தழுவியதேன்?

இதய துடிப்பு சீராய் இருந்தும்
உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்?

வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும்
தேடல் இல்லையே ஏன்?

கத்தியின்றி காயம்இன்றி
வலிகள் ஏன்?

காதலெனும் நோயினால்
உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ?

பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே
காதல் நோய்க்கு மருந்து இல்லையே ஏன் ?

ஏன் ஏன் ஏன் என்று
மனம் மருகி உருகி தவிப்பதேன் ?

~அன்புடன் யசோதா காந்த் ~

Popular Posts