Thursday, 23 February 2012

குரல் நிறுத்திய குயில்

 

கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை

கனலாய் வாழ்ந்த தமிழன்

எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்

எழுச்சிப் புலவன் வீரம்

பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்

பாயும் புயலாய் எம்மை

இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்

இலையே! இலையே! இலையே!

போற்றப் பிறந்த களத்தின் பொருநன்

புன்மை உற்றிழந்த எம் வாழ்வை

மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்

மறந்திகழ் இனப்போர் மண்ணில்

ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்

ஆரியர் நெஞ்சில் கூர்வாள்

ஏற்றப் பிறந்த பாரதி தாசன்

இலையே! இலையே! இலையே!

பீடு படைத்த புலவன் மதத்தைப்

பிளந்த சூறைக் காற்று

கேடு படைத்த மடமைக் குப்பைக்

கிடங்கை எரித்த நெருப்பு

நாடு படைத்த நல்லறி வாளன்

நஞ்சர் நெஞ்சை நொறுக்கி

ஏடு படைத்த பாரதி தாசன்

இலையே! இலையே! இலையே!

மனத்தை வளர்த்த மாந்தர் நேயன்

மண்ணில் நாளும் மண்டைக்

கனத்தை வளர்த்த வல்லாண் மையினர்

கழுத்தை முறித்தோன்! அடிமைத்

தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும்

தறித்த போர்வாள்! மாந்தர்

இனத்தை வளர்த்த பாரதி தாசன்

இலையே! இலையே! இலையே!

No comments:

Post a Comment